தவெக தலைவர் விஜய் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்புகள் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அவை ‘புலியைப் பார்த்து பூனை கோடு போட்ட கதை’ போல இருப்பதாக அவர் கூறினார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், அனைத்து குடும்பத் தலைவியருக்கும் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமின்றி பயணம் வழங்கப்படும், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு அரசு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளதாக கூறினார்.
திமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் இத்தகைய வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன என்றும், இதனால் திமுக கூட்டணியின் செல்வாக்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.




