தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு, வேட்புமனு பரிசீலனை முடிந்த நிலையில் ஆறு பேர் மட்டுமே களத்தில் இருப்பதால், தேர்தல் போட்டியின்றி முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இடங்களுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க.க்கு நான்கு இடங்களும், அ.தி.மு.க.க்கு இரண்டு இடங்களும் கிடைப்பது உறுதியானதாக கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தே.மு.தி.க. சார்பில் சுதீஷ்; காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, கூட்டணிக் கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு திரும்ப பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு இடங்களுக்கு ஆறு பேர் மட்டுமே இருப்பதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.