சென்னை: பொதுநிகழ்ச்சியில் நடிகை திரிஷாவின் படம், பெயர் பயன்படுத்தப்பட்ட நிலையில் இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் கூறிய கருத்துக்கு திரிஷா கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பேசுபொருளான நேரத்தில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது தொடர்பான செய்திகள் கவனம் பெற்றன. அவர் நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாக கூறியிருந்தாலும், யார் என்று பெயர் குறிப்பிடவில்லை. இதற்கிடையில் விஜய்-திரிஷா ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டது குறித்தும் பேசப்பட்டது.
இந்நிலையில், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் திரிஷாவின் பெரிய புகைப்படத்தை முன்னிலைப்படுத்தி பார்த்திபனிடம் கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ‘குந்தவை’ கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்ததையும், அதே படத்தில் பார்த்திபனும் நடித்திருந்ததையும் குறிப்பிட்டு, அவர் கூறிய பதில் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதமாகியது.
இதுகுறித்து திரிஷா எக்ஸ் பதிவில், கடைசி நேரத்தில் அவசரமாக தன் படம் மற்றும் பெயர் பயன்படுத்தப்படுவதாக தனிநபர் ஒருவரின் உதவியாளர் மூலம் தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். மைக்கில் பேசுவதால் முட்டாள்தனமான கருத்து புத்திசாலித்தனமாகவோ நகைச்சுவையாகவோ மாறாது என்றும், அறிவில்லாத குரூரமான வார்த்தைகள் பேசுபவரைப் பற்றியே அதிகம் சொல்வதாகவும் கூறினார்.
திரிஷாவின் பதிவு வெளியான பின்னர், பார்த்திபனும் எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்தார். நடந்தது தவறாகவே நடந்துள்ளது; வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் பதிவிட்டார்.




