ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்து ‘சரியான நேரத்தில்’ முடிவு எடுக்கப்படும் என்றும், அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசித்தே தீர்மானிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஈரான் இஸ்ரேலை அழிக்க திட்டமிட்டதாகவும், தன்னைச் சுற்றியுள்ள நாடுகளையும் குறிவைத்ததாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து செயல்பட்டதாக கூறிய அவர், இஸ்ரேலை அழிக்க நினைத்த நாட்டை தாக்கியதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, இஸ்ரேல் தனியாக ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என தான் கருதுவதாக டிரம்ப் கூறினார். ஆனால் போர் நிறுத்தம் எப்போது, எப்படி அறிவிக்கப்படும் என்பது குறித்து அவர் தெளிவான உறுதியளிக்காமல், அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு செய்வோம் என்றார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. வெள்ளை மாளிகை முன்பு இந்த போர் 4 அல்லது 6 வாரங்கள் நீடிக்கலாம் என கூறியிருந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் உறுதியான பதிலைத் தவிர்த்தார்.
அதே பேட்டியில், லஞ்சம் மற்றும் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்காததற்காக இஸ்ரேல் அதிபர் இசாக் ஹெர்சோக்கை டிரம்ப் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த இஸ்ரேல் அதிபர் மாளிகை, இஸ்ரேல் சட்டத்தின் ஆட்சியின் கீழ் இயங்கும் இறையாண்மைமிக்க நாடு என்றும், மன்னிப்பு தொடர்பான கோரிக்கை நீதித்துறை அமைச்சகம் மூலம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தது.




