மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சமீபத்திய பயணம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையிலான வார்த்தை மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

முதலில் பிதான் நகரில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சி, பாதுகாப்பு காரணங்களால் டார்ஜிலிங் மாவட்டத்தின் கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் குறித்து ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், திரிணமுல் காங்கிரஸ் அரசு ஜனாதிபதியை அவமதித்ததாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, சட்டசபை தேர்தல் காலத்தில் பா.ஜ. தூண்டுதலின் பேரில் ஜனாதிபதி அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டினார். இதற்கிடையில், கொல்கட்டாவில் தேர்தல் கமிஷனை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த போது, பிரதமர் மோடியும் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியும் அமர்ந்திருக்க, ஜனாதிபதி முர்மு நின்றிருக்கும் புகைப்படத்தை காட்டி, இதை “மரியாதையின்மை” என விமர்சித்தார்.

இதற்கு பதிலடியாக பா.ஜ. உண்மை சரிபார்ப்பு குழு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த படம் 2024 மார்ச் 31 அன்று அத்வானியின் இல்லத்தில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. விருது வழங்கும் மரபின்படி ஜனாதிபதி நின்று வழங்கும் போது மற்றவர்கள் அமர்ந்திருப்பது வழக்கம் என்றும், இதை அரசியல் நோக்கில் திரித்துக் காட்டுவது வெட்கக்கேடானது என்றும், அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை மதிக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.