புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 அமெரிக்க டாலரை தாண்டாத வரையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திங்களன்று தெரிவித்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் கிடைப்பில் அழுத்தம் உருவாகி, விலை 100 டாலரை கடந்துள்ளதாக அரசு குறிப்பிட்டது. இருப்பினும், விலை 100 டாலர் அளவிலேயே நிலைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.

பெட்ரோல், டீசல் கையிருப்பு போதுமானதாக இருப்பதால் எரிபொருள் விற்பனை நிலையங்களில் பற்றாக்குறை இல்லை என்றும், ஹார்முஸ் நீரிணைக்கு வெளியேயான வழித்தடங்கள் மூலம் கச்சா எண்ணெய் கொள்முதல் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருவதாகவும் அரசு கூறியது.

விமானங்களுக்கு பயன்படும் எரிபொருளும் போதிய அளவில் இருப்பதாகவும், இந்தியா அதை உற்பத்தி செய்வதுடன் ஏற்றுமதியும் செய்வதால் கவலை தேவையில்லை என்றும் தெரிவித்தது. இந்த சூழலை மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக கையாளுகிறது என்றும் கூறப்பட்டது.

எல்பிஜி சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க முன்பதிவு இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. மேலும், உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தி நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வணிக இணைப்புகளை விட வீட்டு பயன்பாட்டு இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியது. எல்பிஜி இறக்குமதிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க முயற்சி நடந்து வருவதாகவும், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகள் இந்தியாவிடம் எரிவாயு விற்பனைக்கு அணுகியுள்ளதாகவும் தெரிவித்தது. உள்நாட்டு நுகர்வோருக்கான எல்என்ஜி விலை உயர்வு சாத்தியமில்லை என்றும், விநியோகத் தடைகள் ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அரசு கூறியது.