புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவின் பணவீக்கத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது பணவீக்கம் குறைந்த நிலையில் இருப்பதே இதற்கான முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மேற்கு ஆசியாவில் பிப். 28ல் போர் தொடங்குவதற்கு முன் வரை சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவிலேயே இருந்ததாக கூறினார். அப்போது பேரல் ஒன்றுக்கு சுமார் 69 டாலராக இருந்த விலை, மார்ச் 2க்குள் 80.16 டாலராக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.
சில்லரை விலை பணவீக்கம் 2023-24ல் 5.40% ஆகவும், 2024-25ல் 4.60% ஆகவும் இருந்தது; 2025-26 நிதியாண்டின் ஏப்.–ஜன. காலகட்டத்தில் இது மேலும் குறைந்து சுமார் 1.80% ஆக உள்ளது என அவர் விளக்கினார். கடந்த ஜனவரில் மொத்த பணவீக்கம் 2.75% ஆக பதிவாகி, ரிசர்வ் வங்கியின் 2%–6% இலக்கு வரம்புக்குள் இருப்பதாகவும் கூறினார்.
பணவீக்க கட்டுப்பாட்டுக்காக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு 2025 பிப்ரவரி முதல் வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட 1.25 சதவீதம் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அதிகரித்தல், கொள்முதல் செய்த தானியங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்தல், இறக்குமதியை ஊக்குவித்து ஏற்றுமதியை கட்டுப்படுத்தல், ‘பாரத் பிராண்டு’ பெயரில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை, எரிபொருள் மீதான வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.
மேலும் தனிநபர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பை ரூ.12 லட்சமாகவும், சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.12.75 லட்சமாகவும் உயர்த்தியதால் செலவிடக்கூடிய வருவாய் அதிகரித்துள்ளதாக கூறினார். ஜி.எஸ்.டி. விகிதங்களை சீரமைத்ததும் பணவீக்கம் குறைய உதவியதாகவும் தெரிவித்தார். இதனுடன், ‘ஜன் தன்’ உள்ளிட்ட சுமார் 72 கோடி அடிப்படை வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காதவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத கட்டணம் விலக்கப்பட்டு, இனி அந்த கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.




