டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அதன் அதிகாரிகள் குறித்து விசாரணை நீதிமன்றம் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் மற்றும் விமர்சனங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 23 பேரை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்கும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் 2021ல் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்த நிலையில், தற்போது இருவரும் ஜாமினில் வெளியே உள்ளனர்.
முன்னதாக ரோஸ் அவென்யூ நீதிமன்றம், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கெஜ்ரிவால், சிசோடியா, பி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரை விடுவித்தது. மேலும் சி.பி.ஐ. வாதங்கள் நிரூபிக்க முடியாதவை என்றும், சட்டப்படி செல்லுபடியாகாதவை என்றும் கூறி, விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விசாரணை நீதிமன்ற தீர்ப்பு குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளையே தலைகீழாக மாற்றிவிட்டதாக வாதிட்டார். முறையான விசாரணை இன்றி விடுவித்திருப்பது தவறு என்றும், மதுபான கொள்கையை முறைகேடாக வடிவமைக்க லஞ்சம் கைமாறியதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வு, சி.பி.ஐ. மீது விசாரணை நீதிமன்றம் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. அதே நேரத்தில், 23 பேரை விடுவித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 16க்கு ஒத்திவைத்தது.




