தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசிக்கும் 69 வயது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் சிக்கி ரூ.1.66 கோடி இழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த மோசடியில், சி.பி.ஐ., போலீஸ், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் பெயரை பயன்படுத்தி வீடியோ அழைப்புகள் மூலம் மிரட்டி பணம் பறிப்பதே ‘டிஜிட்டல் கைது’ என கூறப்படுகிறது. இத்தகைய மோசடிகளில் மூத்த குடிமக்கள் அதிகமாக குறிவைக்கப்படுவதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.
புகாரின் படி, முதலில் தொடர்புகொண்ட நபர் தன்னை “தீபக் குமார்” என அறிமுகப்படுத்தி, சி.பி.ஐ. மூத்த அதிகாரி என கூறினார். இரண்டு மொபைல் எண்களை பயன்படுத்தி பல பெண்களுக்கு தகாத அழைப்புகள் செய்ததாகவும், இதுதொடர்பாக பெங்களூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொய்யாக குற்றஞ்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், “கவுரவ் சாரதி” என்ற இன்ஸ்பெக்டர் என கூறிய மற்றொரு நபர் அழைப்பில் இணைந்து, ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டு மனிதக் கடத்தல் நடந்ததாகவும், ஜாமினில் வெளியே வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறியதாக புகாரில் உள்ளது. பின்னர் “அர்ச்சனா ராமசுந்தரம்” என தன்னை அறிமுகப்படுத்திய பெண் ஒருவர், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் இணைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற சின்னம் பொறித்த கடிதம் காட்டி, பண மோசடி, மனிதக் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் உள்ளதாக கூறி, சமீபத்திய வங்கி பரிவர்த்தனைகளை கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது. 10 நாட்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து ‘சரிபார்ப்பு’ என்ற பெயரில் பல வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வற்புறுத்தி, ரூ.1.66 கோடி மாற்றச் செய்த பின் தொடர்பை துண்டித்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நீதிபதி போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்தேகநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.




