புதுடில்லி: 2021–25 காலகட்டத்தில் உலகளாவிய ராணுவ ஆயுத இறக்குமதியில் 8.3% பங்குடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயங்கும் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ (SIPRI) தெரிவித்துள்ளது.

1966 முதல் உலக ஆயுதப் பரிமாற்றங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச போக்குகளை சிப்ரி கண்காணித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. 2021–25 காலத்தில் உலகின் முதல் 10 ஆயுத இறக்குமதியாளர்களை பற்றிய அதன் சமீபத்திய அறிக்கையில், 9.7% பங்குடன் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு முக்கிய ஆயுத வழங்குநர்களாக ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்யா 40%, பிரான்ஸ் 29%, இஸ்ரேல் 15% பங்குகளை வகிக்கின்றன.

முந்தைய ஐந்து ஆண்டுகள் (2016–20) உடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4% குறைந்துள்ளதாகவும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்புத் தயாரிப்பு திறன் உயர்ந்ததுதான் இதற்கான காரணமாகவும் சிப்ரி குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், தேவைகள் தொடர்வதால் இந்தியா வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை தொடர்ந்து வாங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், பிரான்சில் இருந்து 140 போர் விமானங்கள் மற்றும் ஜெர்மனியில் இருந்து ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான சமீபத்திய கொள்முதல்களையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்யாவை அதிகமாக சார்ந்திருந்த நிலை குறைந்து, பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.