புதுடில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியை திரிணமுல் காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் நடத்தப்பட்டு, சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 74 லட்சம் மற்றும் மேற்கு வங்கத்தில் 63 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமுறை பெயர் பதிவு, உயிரிழந்தோர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பெயர்களே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இந்த எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது பா.ஜ.க.க்கு சாதகமாக நடந்ததாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற தர்ணாவையும் தொடங்கியுள்ளார். இதனிடையே, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் இணைந்து பதவி நீக்க நோட்டீஸின் வரைவை தயாரித்துள்ளதாக திரிணமுல் மூத்த எம்.பி. ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி, இந்த வாரமே இரு சபைகளிலும் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை தேர்தல் கமிஷனரை நீக்கத் தீர்மானம் தொடங்க, குறைந்தபட்சம் லோக்சபாவில் 100 எம்.பி.க்களும் ராஜ்யசபாவில் 50 எம்.பி.க்களும் கையெழுத்திட வேண்டும் என்பது விதி. மேலும், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைப் போலவே, பதவிக்கு பொருத்தமின்மை அல்லது மோசமான நடத்தை ஆகியவை நிரூபிக்கப்பட வேண்டியதாகும்.




