மாஸ்கோ: ஈரானுக்கு “அசைக்க முடியாத ஆதரவு” வழங்குவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு வாழ்த்து தெரிவித்து கிரெம்ளின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும், புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி கூறுகிறது. இந்நிலையில் புடின் வாழ்த்து செய்தியுடன் தனது ஆதரவு நிலைப்பாட்டையும் தெரிவித்தார்.
கிரெம்ளின் செய்தியில், தந்தையின் பணியை அவர் சிறப்பாகத் தொடர்வார் என்றும், கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை ஒருங்கிணைப்பார் என்றும் புடின் நம்பிக்கை தெரிவித்தார். தீவிரமான போர்சூழலில் இந்தப் பதவிக்கு தைரியமும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வந்ததாகவும், எதிர்காலத்திலும் அப்படியே தொடரும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் தொடர்புடைய தாக்குதல்களால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா-ஈரான் உறவு மேலும் வலுப்படுவதை இது காட்டுகிறது.




