நீதிமன்ற உத்தரவுகளை நீண்ட காலம் அமல்படுத்தாமல் இருந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடங்கியதும் அவசரமாக தாமத மேல்முறையீடு அல்லது மனுக்கள் தாக்கல் செய்வது அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சத்தீஸ்கர் மாநில வன உற்பத்தி கூட்டுறவு சம்மேளனம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அதிகாரிகள் மூன்று மாத அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால் அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இதையடுத்து அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதை எதிர்த்து அதிகாரிகள் அவசரமாக சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தாமத மேல்முறையீடு என்பது விதிவிலக்காக இல்லாமல் வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டதாக அமர்வு சுட்டிக்காட்டியது. அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு முன்மாதிரியாக இருந்து, நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

சீராய்வு மனுவின் முடிவை பொறுத்தே உத்தரவை அமல்படுத்தலாம் என்ற வாதம் சட்டப்படி தவறு என கூறி, முந்தைய உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பவும் கூறி, கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது.