வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத் துறை (இ.டி.) தாக்கல் செய்த இடைக்கால தடை நீக்கக் கோரும் கூடுதல் மனுவுக்கு பதிலளிக்க, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.பி.ஐ.யின் உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியதாக கூறி, இ.டி. வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், இ.டி. நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியிருந்தது.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடையை நீக்கக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளதாக இ.டி. தரப்பு தெரிவித்தது. அதில் சில தொழில்நுட்ப திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதால், திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய நேரம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
ஜெகத்ரட்சகன் தரப்பில், 17 லட்சம் பங்குகள் வாங்கப்பட்டதாகவும், விசாரணையில் வெளிநாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பணம் செல்லவில்லை என்பது தெரிய வந்ததாகவும் வாதிடப்பட்டது. பணப்பரிமாற்றமே நடக்காத நிலையில் சம்மன் அனுப்புவது தேவையற்ற தொந்தரவு எனவும் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இ.டி. கூடுதல் மனுவுக்கு ஜெகத்ரட்சகன் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.




