திருச்சி: தி.மு.க. மாநாட்டில் தே.ஜ.க.-வை குறிவைத்த ஸ்டாலின்

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற தி.மு.க. 12வது மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் இருக்கும் வரை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியால் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தலுக்கு முன்பு இதே இடத்தில் நடந்த மாநாட்டில் ஏழு இலக்குகளை அறிவித்ததாகவும், அந்த ஏழு இலக்குகளையும் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றியதாகவும் அவர் கூறினார். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு கூட தமிழகத்தை “நம்பர் ஒன் மாநிலம்” என்று சொல்லும் அளவுக்கு மாநிலம் முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை, இலவச மகளிர் பேருந்து பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட தி.மு.க. அரசின் திட்டங்களை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சியால் பயனடைந்தவர்கள் வாக்களித்தாலே வெற்றி உறுதி எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தி.மு.க. திட்டங்களை “டாப்-அப்” செய்து பிற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிப்பதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தை காவிமயமாக்க முயற்சி நடப்பதாகவும், “கருப்பு-சிவப்பு கூட்டம்” இருக்கும் வரை அது நடக்காது என்றும் அவர் கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சுயநலத்துக்காக கட்சியை பா.ஜ.க.-விடம் அடகு வைத்துவிட்டதாகவும், அ.தி.மு.க.-வை பலவீனப்படுத்தும் வேலை பா.ஜ.க. செய்கிறது என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், உதயசூரியன் சின்ன வெற்றிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கூட்டணி கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் தி.மு.க. தொண்டர்கள் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.