வாஷிங்டன்: ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாக கருதப்படும் கார்க் தீவை கைப்பற்றும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேரடி வான்வழித் தாக்குதல்களுடன் மட்டுமல்லாமல், ஈரான் பொருளாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தும் நோக்கில் டிரம்ப் தனது நிர்வாக அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தியதாக அந்த செய்திகளில் கூறப்படுகிறது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 90% கார்க் தீவு வழியாக கையாளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி சுமார் 1.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுவதால், இது ஈரான் பொருளாதாரத்தின் முக்கிய “உயிர்நாடி” எனவும் வர்ணிக்கப்படுகிறது.

வடக்கு பாரசீக வளைகுடாவில் புஷேர் அருகே, ஹோர்முஸ் நீரிணைக்கு நெருக்கமாக அமைந்துள்ள கார்க் தீவின் கட்டமைப்பு 1950களில் உருவாக்கப்பட்டு, ஈரான்–ஈராக் போருக்குப் பிறகு புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்பு, இத்தீவிலிருந்து தினசரி உற்பத்தி சுமார் 4 மில்லியன் பேரல்களாக உயர்த்தப்பட்டதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.