தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள் நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிப். 5 முதல் மாநிலம் முழுதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் எழிலகம் வளாகத்தில் நடைபெறும் இந்தப் போராட்டம் நேற்று 33வது நாளை எட்டிய நிலையில், தர்ணா தொடர்ந்தது.
இதற்கு ஆதரவாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் இன்று மற்றும் நாளை தமிழகம் முழுதும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊக்குநர்கள் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். ‘ஓட்சா’ ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் சென்னம்மாள் தலைமை வகித்தார்; மாநிலம் முழுதும் இருந்து வந்த 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கூட்டுறவுத் துறையின் பிற சங்க பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டாலும், தங்களுக்கான ஊதியக்குழு அமைக்கப்பட்டு 20 மாதங்கள் கடந்தும் ஊதிய ஆணை வெளியிடப்படவில்லை என தெரிவித்தது. ஊதிய உயர்வு ஆணையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.




