அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப். 28 முதல் துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. துபாயில் சிக்கிய பயணிகள் வெளியேற உதவ சில நாடுகளின் விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தாலும், விமானப் போக்குவரத்து இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

சென்னையிலிருந்து குவைத், அபுதாபி, மஸ்கட், பஹ்ரைன், தோஹா ஆகிய இடங்களுக்கு எத்தியாட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, கல்ப் ஏர், கத்தார் ஏர்வேஸ், ஏர் அரேபியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன. பலர் மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், திட்டமிட்ட நாளில் விமானம் இயக்கப்படுமா, ரத்து ஆனால் கட்டணம் திரும்ப கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வட்டாரங்கள் கூறுகையில், தற்போது எமிரேட்ஸ், ஏர் அரேபியா, ஓமன் ஏர், சலாம் ஏர் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே சேவையை வழங்க முன்வந்துள்ளன; பிற நாட்டு நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன்வரவில்லை. இந்த நிலை அடுத்த ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தன.

நிலையான இயக்க முறை (SOP)ப்படி விமான ரத்து, ரீபண்ட், மாற்றுத் தேதி பயணம் உள்ளிட்ட விவரங்கள் பயணிகளுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும், எந்தப் பிடித்தமும் இன்றி டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.