2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவுக்கு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் எழுத்துப்பூர்வ பதிலில், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தகவல்களை மேற்கோள் காட்டி, அதே கல்வியாண்டில் 11,682 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் 8,967 முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்தல் மற்றும் இளங்கலை/முதுகலை இடங்களை அதிகரித்தல் தொடர்பாக மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்களிடமிருந்து NMC ஆண்டுதோறும் ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஆய்வு, மதிப்பீடு முடிந்த பின் அனுமதி அல்லது மறுப்பு கடிதம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதுள்ள மாவட்ட பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைத்து புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் சிறப்பு மத்திய நிதியுதவி திட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90:10 விகிதத்திலும், மற்ற மாநிலங்களுக்கு 60:40 விகிதத்திலும் மத்திய-மாநில நிதிப் பகிர்வுடன் திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத வசதி குறைந்த பகுதிகள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; மொத்த ஒப்புதல் செலவு ரூ. 41,332.41 கோடி என தெரிவிக்கப்பட்டது. இதில் மத்திய பங்கான ரூ. 26,715.84 கோடியில் இதுவரை ரூ. 23,246.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




