ஈரானுடன் நடைபெறும் போரிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்ப் மீது அவரது ஆலோசகர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக நியூயார்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் 11வது நாளாக தொடர்கிறது.
இந்தப் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அமெரிக்காவில் பொருளாதார அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், பெட்ரோல்-டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போர் நீடித்தால் அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்தாண்டு இறுதியில் செனட் சபையின் 50 சதவீத இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான அமெரிக்கர்கள் போருக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடையேயும் ஆதரவு குறையத் தொடங்கியதாகவும், கட்சி எம்.பி.க்கள் கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் சமீபத்தில் பேசிய போது போர் விரைவில் முடிவடையும் என்றும், ராணுவம் பெரும்பாலான இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் தேவைப்பட்டால் மேலும் தாக்குதல்கள் நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவரது நெருங்கிய ஆலோசகர்கள் உடனடியாக வெளியேறும் தெளிவான திட்டத்தை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி, அடைந்த இலக்குகளை வெற்றியாக சித்தரித்து வெளியேறலாம் என கூறியுள்ளனர்.
அமெரிக்கா-ஈரான் மோதல் விரைவில் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் சார்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.




