புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை; நிலைமையை மத்திய அரசு மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் தொடர்பான மோதல் காரணமாக எரிபொருள் கிடைப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலை எழுந்த நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது. தேவையை கட்டுப்படுத்தும் வகையில், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரை 21 நாட்களுக்கு பதிலாக 25 நாட்கள் கடந்த பிறகே பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வணிக சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதுக்கலைத் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமையல் காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக கோயல் கூறினார். மேற்கு ஆசிய நிலவரத்தால் உலகளாவிய எரிசக்தித் துறையில் சிக்கல் நீடித்தாலும், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் சீராக இருக்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.