சென்னை: தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழக மக்கள் காட்டிய அன்பை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வெளியிட்ட அறிக்கையில், கடந்த 54 மாதங்களாக தமிழ் சொந்தங்களுடன் பழகி அவர்களது அன்பில் திளைத்ததாகவும், இப்போது பிரியும் சூழல் வந்தாலும் தமிழகத்தில் கழித்த நாட்கள் தன் வாழ்வின் பொற்காலம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் குடும்பத்தின் ஒருவனாகவே தன்னை உணர்ந்ததாகவும், இன்றும் அதே உணர்வில் இருப்பதாகவும் கூறினார்.

கல்வி குறித்து பேசும் போது, தமிழக மக்கள் வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் கல்வியின் துல்லியத்தையும் ஞானத்தையும் உணர்ந்து, உரிய நேரத்தில் அதை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய பண்பாட்டுச் சூழலில் ராமர், கிருஷ்ணரின் செல்வாக்கு இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்றும், சிறு வயதிலிருந்தே பகவத் கீதையும் துளிதாசரின் ராமாயணமும் பயின்ற தன்னிடம் கம்பரின் காவியம் மேலும் விசாலமான பார்வையை அளித்ததாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தின் சிறப்புகளில் ஆகச்சிறந்தது கோவில்கள் எனக் குறிப்பிட்ட அவர், சிதம்பரம் நடராஜரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் தமிழன்னையினதும் தமிழக மக்களினதும் குடும்ப உறுப்பினர்கள் என்றார். தமிழக மக்கள் காட்டிய அன்பையும் தன் நன்றியையும் சொல்ல வார்த்தைகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.