கொல்கட்டா: இந்தியாவில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நாடு திரும்புவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தென் ஆப்ரிக்கா அரையிறுதி வரை முன்னேறி வெளியேறியது; வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர்-8 சுற்றுடன் தொடரை முடித்தது. இதற்கிடையில் திடீரென உருவான போர் சூழல் காரணமாக உலகின் மிகப் பரபரப்பான துபாய் விமான நிலையம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணியினரும் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.
அணியினரை ஒரே விமானத்தில் அனுப்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், நிர்வாக காரணங்களால் அது கடைசி நேரத்தில் நேற்று மாலை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரையும் ஒரே விமானத்தில் அனுப்ப முடியாத நிலையில், பல்வேறு வணிக விமானங்களில் பயணம் செய்யும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. வெளியிட்ட தகவலின்படி, வீரர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளை ஐ.சி.சி. மேற்கொண்டு வருகிறது. மேலும், ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் பேசி, அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி மார்ச் 9-ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டு வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.




