ஈரானின் புதிய ஆட்சியாளரும் மதகுருவுமான மொஜ்தபா கமேனி பாதுகாப்பாகவும் நலமுடனும் உள்ளார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் மகன் யூசுப் பெசேஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. செய்தியின்படி, ஈரானின் முந்தைய ஆட்சியாளராக இருந்த கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாகவும், புதிய ஆட்சியாளர் யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை குறிவைப்போம் என்று இஸ்ரேல் முன்பே எச்சரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்திய தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதுகுறித்து ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் டெலிகிராம் செயலியில் வெளியிட்ட பதிவில் யூசுப் பெசேஷ்கியான், மொஜ்தபா காயமடைந்ததாக தகவல் வந்ததும் அவருடன் தொடர்பில் இருந்த நண்பர்களை உடனடியாக தொடர்புகொண்டதாக கூறினார். அவர்கள், புதிய ஆட்சியாளர் நலமுடன் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்ததாக அவர் எழுதியுள்ளார்; இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.




