போர் தொடங்கிய பிப்.28 முதல் 12 நாட்களில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனாவுக்கு சுமார் 1.2 கோடி கச்சா எண்ணெய் பீப்பாய்களை ஈரான் அனுப்பியுள்ளதாக கடல்சார் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போராட்டத்தைத் தொடர்வதுடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து மீண்டும் தாக்கத் தொடங்கியதாகவும் செய்தி கூறுகிறது. இச்சூழலில், உலகின் பல பகுதிகளுக்கான கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகம் குறிப்பிடத்தக்க அளவு முடங்கியுள்ளதாகவும், பீப்பாய் விலை 120 அமெரிக்க டாலரை கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டேங்கர் டிராக்கர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சமீர் மதானி, பிப்.28 முதல் ஹார்முஸ் வழியாக சீனாவுக்கு 1.17 கோடி பீப்பாய்களுக்கு மேல் ஈரான் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். மேலும், கெப்ளர் நிறுவனம் இந்த அளவை சுமார் 1.2 கோடி பீப்பாய்கள் என மதிப்பிட்டு, அண்மைக்காலத்தில் ஈரானின் கச்சா எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடாக சீனா இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.