டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்தார். தோல்வியடைந்த வாக்குறுதிகளும் ராணுவ அத்துமீறல்களும் அமெரிக்காவின் அணுகுமுறையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரு பேட்டியில், அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு “மோசமான அனுபவம்” இருப்பதாக கூறிய அவர், இனி பேச்சு அல்லது பேச்சுவார்த்தை என்ற கேள்வியே இல்லை என்றார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஈரான் மீது தாக்குதல் நடந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டும் பேச்சுவார்த்தை நடந்ததாக குறிப்பிட்ட அவர், இந்த முறை தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா உறுதி அளித்ததாகவும், ஈரானின் அணுசக்தி தொடர்பான பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு தேட விரும்புவதாக தெரிவித்ததாகவும் கூறினார். மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க குழு கூறியபோதும் மீண்டும் தாக்குதல் நடந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில், இனிமேல் அமெரிக்காவுடன் உரையாடலை தொடரும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.