மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மார்ச் 10 இரவு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்ஷியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்பான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ளது.
இந்த உரையாடலில், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர், அராக்ஷியுடன் “விரிவான உரையாடல்” நடைபெற்றதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வாரங்களில் இரு அமைச்சர்களுக்கிடையே நடந்த மூன்றாவது உரையாடல் இது. இதற்கு முன்பு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் அவர்கள் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




