சென்னை: பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர், சமையல் காஸ் (எல்பிஜி) சிலிண்டர்கள் ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் பதுக்கல் மற்றும் முறைகேடு விற்பனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழி உருவாகியுள்ளது.
அவர் கூறியதாவது: ஒருவர் சிலிண்டர் முன்பதிவு செய்த பின், 21 நாட்களுக்கு பின்னரே டெலிவரி செய்யப்படும். ஒரு முறை பதிவு செய்த பிறகு, அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவை 25 நாட்களுக்கு பின்னரே செய்ய முடியும்.
சில காஸ் ஏஜன்சிகளில் பல மாதங்களாக சிலிண்டர் வாங்காத வாடிக்கையாளர்கள் யார் என்பது தெரியும் என்றும், அந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெயரில் முன்பதிவு செய்து, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஏஜன்சிகளைத் தவிர்த்து சில கடைகளில் முறைகேடாக சிலிண்டர்கள் விற்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இனி சமையல் காஸ் சிலிண்டர்களை முறைகேடாக விற்றாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அவர் கூறினார்.




