‘கஸ்டம்’ (சுங்க வசதி) விமான நிலையமாக இயங்கி வந்த மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விமான நிலைய ஆணையம் (AAI) கட்டுப்பாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

பயணியர் விமான நிலையங்கள் உள்நாடு, சர்வதேசம், கஸ்டம் என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்கள் தற்போது சர்வதேச விமான நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன; மதுரை இதுவரை கஸ்டம் நிலையமாக இருந்து சில நாடுகளுக்கே விமான சேவைகள் இருந்தன.

இந்த தரம் உயர்வால் மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் வெளிநாட்டு பயணத்திற்கு சென்னை அல்லது திருச்சியை அதிகமாக சார்ந்திருந்த நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையிலிருந்து புதிய சர்வதேச விமான சேவைகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், சர்வதேச அந்தஸ்து கிடைப்பதோடு மட்டும் முன்னேற்றம் உறுதி ஆகாது; விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்கள், சேவை திட்டமிடல் மற்றும் திறன் அதிகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால்தான் பயன் முழுமையாக கிடைக்கும் என ஏவியேஷன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிறுவனங்கள் ‘ஹப் அண்ட் ஸ்போக்’ முறையில் இயக்கங்களை அமைப்பதால், மதுரைக்கு முன்னுரிமை அளிக்கும் வழித்தடக் கொள்கை அவசியம் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த முடிவுக்கு தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.ம.மு.க. பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.