வரும் சட்டசபைத் தேர்தலில், திமுக ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஒரு தொகுதியில் மட்டும் கட்சியின் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கி நடத்தி வருகிறது. கூட்டணியில் உள்ள மதிமுக கூடுதல் தொகுதிகளையும், தனிச் சின்னத்தில் போட்டியிடும் அனுமதியையும் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒதுக்கப்படும் தொகுதிகளில் திமுக ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பு கூறி வருவதால், தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்த தொகுதிகளில் போட்டி என்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.
இந்த சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக திடமான முடிவு எடுக்க சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை மற்றும் இம்முறை எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், கட்சியின் பதிவு அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி, ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்திலும் மற்ற தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் போட்டியிடலாம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் திமுகவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் காலம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.




