மேற்காசியாவில் நிலவும் சூழலை முன்வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

மேற்காசியாவில் நடப்பது அனைவருக்கும் கவலை அளிப்பதாகவும், அங்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் மோடி கூறினார். வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்க பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து சக்திகளையும் பயன்படுத்தும் என அவர் வலியுறுத்தினார்.

போர்சூழலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வளைகுடாவில் உள்ள நட்பு நாடுகள் இந்திய குடிமக்களின் நலன்களை பாதுகாத்து வருவது திருப்தி அளிப்பதாகவும், இந்திய தூதரகங்கள் 24 மணிநேரமும் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வெளியிட்டு இடையூறு ஏற்படுத்த முயல்கிறது என மோடி குற்றம்சாட்டினார். இப்படியான பேச்சுகள் அங்கு உள்ள இந்தியர்களை ஆபத்தில் தள்ளக்கூடும் என்றும், தன்னை திட்ட வைப்பதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

அதே உரையில், கேரளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, இப்போது பாஜ தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். அப்படி செய்தால் “வளர்ந்த கேரளத்தை” பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.