மத்திய அரசு கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றியிருப்பது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இதை கூறினார்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியதாக மோடி கூறினார். இந்த இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்துள்ளதாகவும், முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், கேரள வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட மீட்பு முயற்சிகளை மோடி பாராட்டினார். தங்கள் உயிரை பணயம் வைத்து பலரின் உயிர்களை காப்பாற்றிய துணிச்சலை உலகம் கண்டதாகவும், நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் அவர்களின் அர்ப்பணிப்பு வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யும் வகையில் ‘தேசிய மீன்வள டிஜிட்டல் தளம்’ தொடங்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இதன் மூலம் அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது எளிதாகும் என்றும், முந்தைய ஆட்சிகளில் மீனவர் சமூகத்தை பல ஆண்டுகள் புறக்கணித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசே என கூறிய மோடி, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் கேரளத்திற்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.