பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சி நிரலின்படி, கேரளாவிலிருந்து இன்று மாலை சுமார் 5.45 மணிக்கு திருச்சி வருகிறார். ஆற்றல் கட்டமைப்பு, சாலை மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் திட்டத்திற்கு ரூ.3,680 கோடி முதலீட்டில் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சென்னை அருகே மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.1,490 கோடி செலவில் அமைத்த மசகு எண்ணெய் கலவை ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளைத் திறந்து வைக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மாலை சுமார் 6.30 மணிக்கு திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்; மாநில அரசியல் நிலவரம் குறித்து அவர் ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்த கருத்துகளும் இதில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




