அமெரிக்கா மற்றும் தென் கொரியா நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடியாக, வடகொரியா இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 10 அன்று ‘சோ ஹியோன்’ என்ற போர்க் கப்பலில் இருந்து க்ரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும், அது வடகொரியாவின் மேற்கு கடற்கரை அருகேயுள்ள இலக்கு தீவுகளை துல்லியமாகத் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது 14 வயது மகளுடன் அறையில் அமர்ந்து பார்வையிட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஒத்திகையின் போது, நம்பகமான அணு ஆயுதத் தடுப்புத் திறனை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2022 முதல் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஏவுகணை தொடர்பான நிகழ்வுகளில் மகளின் பங்கேற்பு அதிகரித்துள்ளதை முன்வைத்து, அவரை அரசியல் வாரிசாக முன்னிறுத்தும் நோக்கம் இருக்கலாம் என உளவு அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.