சொத்து பதிவின்போது பான் (PAN) எண் விவரங்களை அளிக்க வேண்டிய வரம்பை உயர்த்தும் வகையில் மத்திய அரசு வருமான வரி சட்ட விதிகளை திருத்தியுள்ளது. இதன்படி ரூ.20 லட்சம் மதிப்புவரை உள்ள சொத்துகளை பதிவு செய்யும்போது பான் எண் அளிக்க வேண்டியதில்லை.
சொத்து வாங்கும் விவரங்களை வருமான வரித் துறைக்கு மறைப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்கு முன் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளை பதிவு செய்யும்போது பான் எண் அளிப்பது கட்டாயமாக இருந்தது; பான் எண் இல்லாதவர்கள் தனிப் படிவத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டியிருந்தது.
புதிய திருத்தத்தின் மூலம் விலக்கு வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்புள்ள பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும் பான் எண் தெரிவித்தால் போதும்.
இந்த புதிய விதிகள் ஏப்.1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வாங்குதல், விற்பனை, பரிசாக வழங்குதல் மற்றும் கூட்டாக மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.




