காரைக்குடியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்புடைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் இயங்கி வரும் அலுவலகத்தை காலை நேரத்தில் கட்சியினர் திறக்க வந்தபோது, தாக்குதல் நடந்ததற்கான தடயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்ததும் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி உள்ளிட்ட கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், அருகிலுள்ள கட்டடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார், எந்த காரணத்தால் இச்செயல் நடந்தது என்பதையும் விசாரணை மூலம் கண்டறிய முயன்று வருகின்றனர்.