ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அரசு டவுன் பஸ்களில் வடமாநில பெண் பக்தர்களிடம் கண்டக்டர்கள் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கும் பல பக்தர்கள் அரசு பஸ்களில் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார்கள்.

இந்த நிலையில், வடமாநில பெண் பக்தர்களிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு இலவசம் தானே என கேட்டால், அது தமிழக பெண்களுக்கு மட்டும் என கண்டக்டர்கள் தெரிவிப்பதாகவும் புகார் உள்ளது.

இதுகுறித்து ராமேஸ்வரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செந்தில், தினமும் பல வடமாநில பெண்கள் அரசு டவுன் பஸ்களில் பயணிப்பதாகவும், அவர்களிடம் கட்டணம் வசூலிப்பது வேதனையளிப்பதாகவும் கூறினார். இதற்கு நடவடிக்கை கோரி உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் அறிவரசன், தாம் பணியில் சேர்ந்தது இரண்டு நாட்களே ஆகும் என்பதால் முன்பு என்ன நடைமுறை இருந்தது தெரியாது என கூறினார். ஆனால் தற்போது பெண்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.