லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ‘இண்டி’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளது.

சபையில் பேசுவதற்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது எந்த எம்.பி.யாக இருந்தாலும் சபாநாயகரின் அனுமதி அவசியம் என ரிஜிஜு கூறினார். அந்த அடிப்படை நடைமுறையையே ராகுல் பின்பற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசவில்லை; சபையின் கண்ணியத்தையும் சீர்குலைக்கவில்லை எனவும் ரிஜிஜு தெரிவித்தார். ராகுல் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசியதால் சபாநாயகர் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், தன் வாழ்நாளில் இதுபோன்ற காட்சியை பார்த்ததில்லை எனக் கூறிய ரிஜிஜு, பிரதமர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது ராகுல் தன் இருக்கையிலிருந்து ஓடி வந்து அவரை கட்டியணைத்ததாகவும், சபையில் மற்றொரு எம்.பி.யை நோக்கி சைகை செய்ததாகவும் குறிப்பிட்டு, இது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தகுந்த நடத்தைதானா என கேள்வி எழுப்பினார்.