மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியுடன் தொடர்புடைய புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதித்துறை அலுவலர்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சுமார் 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததுடன், மாநிலத்தைச் சேர்ந்த பலரும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜாய்மால்யா பாக்சி) விசாரணையில், நியமிக்கப்பட்ட நீதித்துறை அலுவலர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அவர்களை கேள்வி கேட்கும் வகையிலான மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்காது என்றும் தெரிவித்தது. இத்தகைய முயற்சிகளை சகிக்க முடியாது என்றும் அமர்வு குறிப்பிட்டது.

கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, மார்ச் 9 மாலை வரை 10.16 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது.

மேலும், பணியை விரைவுபடுத்தும் பெயரில் தேர்தல் கமிஷன் கட்டாய விதிகளை அறிமுகப்படுத்தக் கூடாது; அவசியமெனில் கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது. நீதித்துறை அலுவலர்கள் நிராகரிக்கும் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட தனி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கொல்கட்டா உயர் நீதிமன்றம் அமைக்கலாம் என்றும் கூறியது. அதேசமயம், நீதித்துறை அலுவலர்களின் முடிவுகளில் தேர்தல் கமிஷனின் எந்த நிர்வாக அதிகாரியும் தலையிட அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.