புதுடில்லி: 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் உத்தரபிரதேசம் காசியாபாத் சேர்ந்த ஹரிஷ் ராணா (32) என்பவருக்கு மறைமுக கருணைக்கொலை (passive euthanasia) செய்ய உச்சநீதிமன்றம் மார்ச் 11 அன்று அனுமதி வழங்கியது.
2013ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்த போது, சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. குணமடைய வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையும் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தந்தை அசோக் ராணா மறைமுக கருணைக்கொலைக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை ஏற்று, தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையை நிறுத்த உத்தரவிட்டது.
மேலும், நோயாளியை எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கவும், வீட்டிலிருந்து அங்கு மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எய்ம்ஸ் நிர்வாகம் செய்யவும் நீதிமன்றம் தெரிவித்தது. 2018 மற்றும் 2023 ஆண்டுகளில் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜனவரியில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




