ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மென்பொருட்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தெரிய வந்த ஒரு பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை கடுமையாக கண்டித்து தள்ளுபடி செய்தது. பி.எம். கேர்ஸ் நிதியம் தொடர்பாக லூதியானாவைச் சேர்ந்த துணி வியாபாரி ரஜ்னிஸ் சித்து தாக்கல் செய்த மனுவே இது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மனுதாரர் வாசித்துக் காட்டிய எழுத்துப்பூர்வ வாதங்களை கவனித்த தலைமை நீதிபதி, அவரது பின்னணி மற்றும் கல்வித்தகுதி குறித்து கேள்விகள் எழுப்பினார்.

மனுவில் இடம்பெற்ற “Fiduciary Risk of Corporate Donors” என்ற சொற்றொடருக்கு விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டபோது, அவர் குறிப்புகளைப் பார்த்து வாசிப்பதாக அமர்வு கவனித்தது. இதனால், யாரோ மற்றொருவர் தயாரித்ததை அவர் படிக்கிறார் எனக் கூறிய தலைமை நீதிபதி, பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு/விழிப்புணர்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடலாம் என எச்சரித்தார்.

இதையடுத்து சித்து, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் டைப்பிஸ்ட் ஒருவர் உதவியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 வழங்கியதுடன் நான்கு ஆடைகளை பரிசளித்ததாகவும் தெரிவித்தார். வழக்கறிஞரை நியமிக்க வசதி இல்லாததால் 3 அல்லது 4 ஏஐ மென்பொருட்களின் உதவியுடன் மனுவை தயாரித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் சட்டரீதியான நடவடிக்கைகளும் கடும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், முந்தைய நாளில் ஐந்து பொது நல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதில் வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டில் “எதிர்மறை சக்தி” உள்ளதா என விஞ்ஞான ஆய்வு கோரிய மனுவும் இருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.