நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமையை உறுதி செய்ய, பொது சிவில் சட்டம் (யு.சி.சி.) அமல்படுத்தப்படுவது தான் ஒரே பயனுள்ள வழி என, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்தது.

முஸ்லிம் தனிநபர் (ஷரியத்) சட்டத்தின் கீழ் பெண்களின் வாரிசுரிமை மீறப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை தலைமை நீதிபதி உடன் நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ஒரே மதத்தினருக்குள்ளேயே சொத்துரிமைகளில் பாகுபாடு இருப்பதாகவும், குறிப்பாக பெண்களுக்கு சமமான வாரிசுரிமை மறுக்கப்படுவதாகவும் வாதிட்டார். வாரிசுரிமை என்பது மதச்சடங்கு அல்ல; அது ஒரு சிவில் உரிமை என்பதால், முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ஷரியத் சட்டத்தின் வாரிசுரிமை விதிகள் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் எந்த சட்டம் வாரிசுரிமையை நிர்வகிக்கும் என்பது முக்கியமான கேள்வி என குறிப்பிட்டார். அதற்கான சரியான பதில் யு.சி.சி. தான் என்றும், நீதிமன்றங்கள் சட்டங்களை ரத்து செய்வதை விட பார்லிமென்ட் ஒரு பொதுவான சட்டத்தை கொண்டு வருவது குழப்பங்களை தவிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, தற்போதைய தனிநபர் சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவித்தால் வாரிசுரிமை விவகாரங்களில் சட்ட வெற்றிடம் உருவாகி, பெண்களுக்கு தற்போது கிடைக்கும் குறைந்த அளவிலான உரிமைகளும் பாதிக்கப்படலாம் என எச்சரித்தார். நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு ஏற்ப மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.