வாஷிங்டன்: ஈரானை மையமாகக் கொண்ட போரை “குறுகிய இன்பச் சுற்றுலா” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்து, இது விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்தார். அதே நேரத்தில், கச்சா எண்ணெய் வினியோகத்தை தடுக்க ஈரான் முயன்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போர் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அது எதிர்பார்த்ததை விட நீண்டு 11 நாட்களை கடந்தும் தொடர்கிறது. சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்து தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னணியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை தாக்கலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளித்த டிரம்ப், எண்ணெய் வினியோகத்தை தடுக்க ஈரான் “விஷமதனம்” போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இதுவரை நடந்ததை விட “20 மடங்கு” கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும் என கூறினார்.
மேலும், ஈரானின் உள்கட்டமைப்புகளை மீண்டு எழ முடியாத அளவுக்கு சிதைக்க முடியும் என்றும், அத்தகைய நிலை ஏற்படக் கூடாது என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, “போர் எப்படி, எப்போது முடிவுக்கு வரும் என்பதை அமெரிக்கா அல்ல; ஈரான் தான் முடிவு செய்யும்” என கூறினார்.
அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இதுவரை போரில் ஈரானில் 1,332 பேர், லெபனானில் 397 பேர் மற்றும் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.




