சென்னை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 60 வேட்பாளர்களுடன் கட்சித் தலைவர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை தேர்தலுக்காக பிப்ரவரி மாதத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்ட நிலையில், எத்தனை மனுக்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன என்ற விவரத்தை கட்சி இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பிறகு பேசிய விஜய், இனி தன்னிடம் எல்லாமே அரசியல்தான் என்றும், குடும்பம் மற்றும் நட்பு உள்ளிட்டவற்றை ஒதுக்கி முழுநேரமாக அரசியலில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் என்ற போரில் வேட்பாளர்களே கட்சியின் முன்கள வீரர்கள் எனக் கூறிய அவர், பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாகவும், கடும் போட்டிக்கிடையே நம்பிக்கையுடன் தேர்வு செய்ததாகவும் சொன்னார். த.வெ.க. தேர்தல் அறிக்கை பல தரப்பினரிடமும் வரவேற்பு பெற்றுள்ளதாக கூறி, அதையே முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதேபோன்ற ஆலோசனை கூட்டங்களை முடித்த பின், வரும் 18-ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




