லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். பார்லிமென்ட் வருகை பதிவேட்டில் ராகுலின் பங்கேற்பு குறைவாக இருப்பதாகவும், கூட்டத்தொடர் நடக்கும் நேரங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவில் பேசிய அமித் ஷா, விதிகளை நிலைநாட்டுவது சபாநாயகரின் தலையாய பணி என்றும், சபையில் அவரது முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார். சபாநாயகரின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது; அதை கேள்விக்குள்ளாக்குவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.

பார்லிமென்ட்டில் பேச நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் ராகுல் ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று விடுவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார். ஜனாதிபதி உரைக்கு கூட அவர் வரவில்லை என்றும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மற்றும் விவாதங்கள் நடந்தபோது ராகுல் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகள் சபை விதிகளை இஷ்டம்போல வளைக்க முயல்கின்றன என்றும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விதிகள் எப்படி மீறப்பட்டன என்பதை விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார். பின்னர் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.