ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், “தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு மாநாடு” உயர் நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டியில், மார்ச் 15-ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதாகக் கூறி காவல்துறை அனுமதி மறுத்ததாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதாகவும் கூறினார்.

மாநாட்டிற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம் என மீண்டும் வலியுறுத்தினார்.