மாமியாரின் வங்கி கணக்கு வழியாக ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பி.எஸ்.என்.எல். சென்னை வட்டத்தின் முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தற்போது சென்னை வட்டத்தில் முதன்மை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் 2017 முதல் 2020 வரை கேரள மாநிலத்தின் திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் முதன்மை பொது மேலாளராக பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த திலீப் என்ற ஒப்பந்ததாரர், ரூ.7 கோடிக்கு மேல் மதிப்புள்ள ‘கேபிள் ஒயர்கள்’ பதிக்கும் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்தப் பணிக்கான தொகையை விடுவிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட, முதலில் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகவும், பின்னர் மாமியார் ஜானகியின் வங்கி கணக்கு வழியாக ரூ.1.90 லட்சம் காசோலையை லஞ்சமாக பெற்றதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அதிகாரிகள் சி.பி.ஐ.-க்கு புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில் லஞ்சம் தொடர்பான தகவல்கள் உறுதியானதாகக் கூறி, மதுரை, விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் ராஜேந்திரனின் வீடு மற்றும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் மாமியார் கணக்கு வழியாக லஞ்சம் பெற்றது கண்டறியப்பட்டதாக கூறி, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.