புதுடில்லி: நாட்டின் சில துறைகளில் உருவாகியுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு விரிவான உத்தியை வகுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நிலக்கரி அமைச்சகத்திற்கு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கை, மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வர, ஈரானும் பதிலடி கொடுப்பதால் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாக கூறப்படுவதால், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20% பாதிக்கப்படும் சூழல் உருவாகி, இந்தியாவையும் சேர்த்து பல நாடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வட்டாரங்களின் தகவலின்படி, நாடு முழுவதும் தற்போது 21 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது; இது சுதந்திரத்திற்குப் பின் பதிவாகும் அதிகபட்ச அளவு. இந்த கையிருப்பு விநியோகத் தொடரின் பல நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது: பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களில் 12.7 கோடி டன், தனியார் மற்றும் வணிக சுரங்கங்களில் 1.5 கோடி டன், மின் உற்பத்தி நிலையங்களில் 5.4 கோடி டன், போக்குவரத்து துறைக்காக 1.4 கோடி டன் என ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் பாதிக்காமல் இருக்க, அரசு மாணவர் விடுதிகளில் சமையல் தேவைகளுக்காக நிலக்கரி வழங்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு நிலக்கரி விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற தொழில் துறைகளுக்கு கூடுதல் எரிசக்தி தேவைப்பட்டால் பெட்ரோலிய அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து தடையற்ற வழங்கல் உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு நிலக்கரி வழங்குவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி, விநியோகத்தை நிலைப்படுத்தவும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் கூறின.




