மேற்காசிய போர் பதற்றத்தை கண்காணிக்க மத்திய அரசு அமைத்துள்ள அமைச்சகங்களுக்கு இடையிலான சிறப்பு குழு, சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தைப் பற்றி பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் வினியோகம் தடையின்றி தொடர்கிறது என அதிகாரிகள் கூறினர்.
ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமே சார்ந்திருக்காமல் பல கடல் வழித்தடங்கள் மூலம் சரக்குக் கப்பல்கள் வருவதாகவும், பதற்றம் அதிகரித்த பிறகு மாற்றுப் பாதைகளில் அதிக அளவில் கச்சா எண்ணெய் வருவதாகவும் குழு விளக்கமளித்தது.
பெட்ரோலியத் துறையின் இணை செயலர் சுஜாதா சர்மா, எல்.என்.ஜி. சரக்குடன் இரண்டு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறினார். வீட்டு சமையல் சிலிண்டர் காத்திருப்பு வழக்கம்போல இரண்டரை நாளளவிலேயே இருப்பதால், நுகர்வோர் அவசரமாக முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முன்பை விட உற்பத்தியை உயர்த்தி, தற்போது 100 சதவீதத்துக்கு மேலாக உற்பத்தி நடக்கிறது என அதிகாரிகள் கூறினர். நாட்டின் தினசரி எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் என்றும், அதில் 97.5 மில்லியன் அளவு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் 47.4 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் அளவுக்கு வினியோகத்தில் தற்காலிக தடை ஏற்பட்டதாகவும், மாற்று பாதையில் கொள்முதல் தொடங்கியதால் அது சரியாகும் என்றும் கூறப்பட்டது. இதே நேரத்தில், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுடன் நடந்த ஆலோசனையில், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், வினியோக நிலவரத்தைப் பற்றி பொதுமக்களுக்கு முறையான தகவல் வழங்க செய்தித் தொடர்பாளர்களை நியமிக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.




