மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளை தோண்டும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரண்டு வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோட்டூர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் சுமார் ஒன்றரை மாதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், சாலை தோண்டுதலால் அருகிலுள்ள வீடுகளின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும், பணிகள் முடிந்த பிறகும் சாலை மீண்டும் அமைக்கப்படாததால் தூசி மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சாலைகளை தோண்டும்போது சென்னை மாநகராட்சி, மின் வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், காவல்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் வழிகாட்டுதல்கள் வகுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் மற்றும் குடிநீர்/கழிவுநீர் இணைப்புகளை மீண்டும் அமைத்துத் தரவும், மன உளைச்சலுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.